×

குளச்சலில் படகு கவிழ்ந்தது குமரியில் தொடர் கடல் சீற்றம்: தேங்காப்பட்டணம் பகுதியில் சாலை துண்டிக்கப்படும் அபாயம்

புதுக்கடை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென் மேற்கு பருவக்காற்று காலமான ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். இந்த காலகட்டங்களில் கடலோர பகுதி கிராமங்கள் அதிக அளவில் பாதிப்படைவதுண்டு. இதனால் அனைத்து பகுதிகளிலும் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டப்பட்டு, கடலரிப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கடல் சீற்றத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் தடுப்பு சுவர்கள் சேதம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த தினம் மீன்பிடிக்க சென்ற இரண்டு பேர் அலையில் சிக்கி மாயமான சம்பவம் நடந்தது.

இந்த நிலையில் தற்போது தேங்காப்பட்டணத்தில் இருந்து இனயம் வழியாக செல்லும் கடற்கரை சாலை இந்த கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேங்காப்பட்டணம் அருகே அரயந்தோப்பு பகுதி கடந்த 15 ஆண்டுகளாக கடலரிப்பால் பாதிக்கப்படும் பகுதியாகும். தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் மீண்டும் அரயந்தோப்பு பகுதியில் சாலையில் மண் குவியல் ஏற்பட்டதுடன், இன்னும் சில தினங்களில் சாலை உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இதனால் கடந்த ஒரு வாரமாக இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேறு வழியாக பல கிலோமீட்டர் சுற்றி செல்கின்றன.

இதனால் தேங்காப்பட்டணம் முதல் குறும்பனை வரையிலான 8 மீனவ கிராம மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே அரயந்தோப்பு பகுதியில் உடனடியாக கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளச்சல்: குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம்  நள்ளிரவு முதல் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.   திடீரென ராட்சத அலைகள் எழும்பி மணல் மேடுகளை தாண்டி விழுந்தது. இதனால்  கரையோரம் நிறுத்தியிருந்த கட்டுமரங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  கொண்டு சென்றனர். கடல் சீற்றத்தால் குளச்சல் மற்றும் சுற்றுப்புற  கடலோர கிராமங்களில் பெரும்பாலான மீன்வர்கள் நேற்று மீன்பிடிக்க  செல்லவில்லை.  

இதனால் வழக்கத்தைவிட மீன்வரத்து குறைவாகவே இருந்தன. கோடிமுனை  மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ். தனது பைபர் படகில் எட்வின்,  சோபின் ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார். நேற்று அதிகாலை அவர்கள் கரை  திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு  கவிழ்ந்து 3 பேரும் உயிருக்கு போராடினர். பின்னர் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால்  படகு அலையில் கடலுக்குள் 100 மீட்டர் இழுத்து சென்றது. இதனை கரையில்  இருந்து பார்த்த மீனவர்கள், கடலுக்குள் குதித்து படகை மீட்டனர்.  இருப்பினும் இன்ஜின் சேதமாகியது. படகில் இருந்த மீன்களும் கடலுக்குள்  கவிழ்ந்தது.

தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
 அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜோர்தான் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக அரயந்தோப்பு பகுதி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் இங்குள்ள மக்கள் இடம் பெயர்ந்து வேறு பகுதிக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். வருடம் தோறும் இது போன்று சாலை சேதமடையும் போது ஊர் பொது மக்கள் மற்றும் சில தனி நபர்கள்உதவியுடன் மணல் திட்டுகளை அகற்றி, தடுப்பு சுவர்கள் அமைக்கும் நிலை உள்ளது. நிரந்தரமாக சேதம் ஏற்படாத வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கூறினார்.

Tags : Kulachal ,area ,road ,Kumari ,Tenkapattanam ,sea ,Colachel , Kulachal, boat capsized .Kumari. Sea fury.Thenkapattanam
× RELATED குளச்சலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்